பதிவு செய்த நாள்
02
நவ
2012
03:11
இறைவன் நமக்காய் படைத்த தொட்டில், பூமி, அதில் தான், நாம் தினமும் தவழ்கிறோம். அதைத்தான் ஒரு கவிஞன் அழகாய் எழுதினான், நீ கடைசியாய் தூங்கிய தொட்டிலில், உன் ஞாபங்கள் மட்டும், இன்னும் சிணுங்கிக் கொண்டிருக்கிறது! என்று. என்னடா... வழக்கத்துக்கு மாறா, தத்துவத்தை அள்ளித் தெளிக்கிறாங்கே... என, திகைத்து போனீங்களா? விஷயம் தொட்டில் தொடர்புடையதாச்சே! பீடிகை பெரிசாத் தானே இருக்கும்! தமிழகத்தில், தாலி, சேலைக்கு எத்தனை செண்டிமென்ட் உண்டோ, அதே அளவிற்கு, தொட்டிலுக்கும் உண்டு. ஆம், அங்கு மட்டும் தான், மேடை கூச்சமின்றி, அனைத்து தாயும், இசையமைப்பாளராகிறார். அவள் பாடும் தாலாட்டு, குழந்தைக்கு மட்டுமே புரியும், அதிசய ராகம். சில நேரத்தில், குழந்தைக்கான, ஆராரோ! ஆரிராரோ...வை, கேட்டால், நமக்கே, நம்மை அறியாமல் தூக்கம் வந்துவிடும்.
இளமையில் கேட்ட முதல் இசையாச்சே, அவ்வளவு எளிதில் மறந்து போகுமா? துளியாய் இருந்தவளை கருவாக்கியது தந்தை, கருவாய் இருந்தவளை உருவாக்குவது அன்னை, உருவானவளை மனைவியாக்குவது கணவன், அதுவரை பெண்மையாய் இருந்தவளை தாயாக்கியது குழந்தை,. பிறக்கும் போதே, தனக்கு பதவி உயர்வு தரும் குழந்தையை, தன் உயிரினும் மேலாய் பாவிக்கிறாள் தாய். பிரசவிக்கும் தன் குழந்தையை, தங்கத் தொட்டிலில் சீராட்டி, பாராட்டவே, தாய் விரும்புகிறாள். என்ன செய்ய, அந்த கொடுப்பினை, எத்தனை தாய்க்கு கிடைக்கிறது? பணம் படைத்தவர் கூட, தேக்கு, சந்தன மரங்களில் தொட்டில் செய்து, பரவசப்படுகின்றனர். இதுதான் தங்கத்திற்கும், நமக்கும் உள்ள தொடர்பு. வேண்டாம் இனி ஏக்கம், உங்கள் குழந்தையும், தங்கத் தொட்டியில் தவழலாம். தங்கம் மட்டுல்ல, வைரம், மாணிக்கம் பதித்த தொட்டில் அது. இது எப்படி சாத்தியம், என்கிறீர்களா? ரொம்ப செலவாகாது. உங்கள் ஊரிலிருந்து பழநிக்கு பஸ் ஏறுங்க, மலைக்கோயில் வாங்க, ரூ.300 செலுத்துங்க, உங்கள் அன்புச் செல்லத்தை தங்கத்தில் வைத்து தாலாட்டுங்கள். தண்டாயுதபாணி சன்னதியின் தெற்கே உள்ள அந்த தங்கத்தொட்டிலில், குழந்தையை தாலாட்டினால், முருகன் அருளில், ஆரோக்கியம், அறிவு, நீண்ட ஆயுள் கிடைக்கும், என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டி, அங்கு நேர்த்தி கடன் செலுத்துபவர்களும் உண்டு. அருள் தரும் முருகன், நம் ஆசையும் தீர்க்கிறான், பிறகென்ன யோசனை, தாலாட்டுப் பாடலுடன், தண்டாயுத பாணியிடம் வாருங்கள்!