குபேரனின் குணங்கள்: குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணம் (பொறுமையுடன் பணி செய்தல்) அவசியம் என்பதை தன் குணத்தின் மூலம் உணர்த்துகிறார். அடுத்தவனைப் பார்த்து அவனைப் போலவே பணக்காரன் ஆக வேண்டும் என நினைத்தால் முடியாது. அந்த பணக்காரனின் பின்னணியில் எந்த அளவிற்கு உழைப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு உழைப்பவனுக்கு பொருளையும் அருளையும் அவர் வாரி வழங்குவார். தேவலோகத்திலுள்ள குபேரபட்டினம் இவரது ஊர். இங்குள்ள அழகாபுரி அரண்மனை மண்டபத்தில் தாமரைப் பூ, பஞ்சு மெத்தை மீது, மீனாசனத்தில் குபேரன் அமர்ந்துள்ளார். அவரது ஒரு கை அபயமுத்திரை காட்டுகிறது. சிரமமான நேரத்தில், செல்வத்தைக் கொடுத்து உதவுவதே இந்த முத்திரையின் நோக்கம். அவரது தலையில் தங்ககிரீடம் சூட்டப்பட்டுள்ளது. முத்துக்குடையின் கீழ் அமர்ந்திருப்பார். இவரது பிரதிநிதியான சங்கநிதியின் கையில் வலம்புரி சங்கு இருக்கும். இது செல்வத்தின் அடையாளம். இன்னொரு பிரதிநிதியான பதுமநிதியின் கையில் தாமரை இருக்கும். இவர் பரந்து விரிந்த கல்வி அறிவை தருபவர். கல்வியும் செல்வமும் இணைந்து இருக்க வேண்டும் என்பதே குபேர தத்துவம்.