ஒவ்வொரு திதிக்கும் ஒரு மகத்துவம் உள்ளது. திருதியை என்றால் மூன்றாம் நாள், க்ஷயம் என்றால் குறைவு. அக்ஷயம் என்றால் குறைவில்லாதது. நிறைந்தது என்று பொருள். அட்சய திருதியை தினத்தன்று தங்களால் முடிந்த அளவு தங்கத்தை வாங்கி ஏழை எளியவர்களுக்குத் தானமாகக் கொடுக்கலாம். எத்தனையோ ஏழை சகோதரிகள் திருமணத்துக்கு திருமாங்கல்யம் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் நாம் அவர்களுக்கு உதவி செய்யலாம். மேலும், தண்ணீர் தானம் (குடத்தில் தண்ணீரை நிரப்பிக் கொடுத்தல்), தண்ணீர்ப் பந்தல் அமைத்தல், விலங்குகளுக்கு நமது வீட்டு வாசலில் தண்ணீர் நிரப்பி வைத்தல், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுதல், அன்ன தானம், ஆடை தானம் மற்றும் எது இயன்றதோ அதை ஏழை எளியவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் தானம் அளித்தல் வேண்டும்.