பதிவு செய்த நாள்
16
மே
2024
12:05
மாமல்லபுரம்: மாமல்லபுரம், கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டில், பல்லவர் கால துறைமுகமாக விளங்கியது. ராஜசிம்மன் என்ற இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன், இங்குள்ள கடற்கரை பகுதியில், சைவ - வைணவ வழிபாட்டு கற்கோவிலை அமைத்தார்.
இக்கோவிலை கடல் சூழ்ந்து அழியாமல் பாதுகாக்க, இந்திய தொல்லியல் துறை, 40 ஆண்டுகளுக்கு முன், அதைச் சுற்றிலும் பாறை கற்கள் குவித்தது. கோவில் வளாகம் வெளியே, வடபுறம் மீனவர் பகுதி உள்ளது. இப்பகுதியில், கடல் நீரோட்ட திசைமாற்ற நிகழ்வால் கடலரிப்பு ஏற்பட்டு, அவ்வப்போது கடற்கரை மணற்பரப்பு அழியும். கடல்நீர் நிலத்தில் புகும். பின், கடல் சற்றுத் தொலைவிற்கு உள்வாங்கி, மணற்பரப்பு உருவாகும். கடந்த 2022 கடலரிப்பின் போது, கடற்கரை கோவில் அருகில், மகிஷாசுரமர்த்தினி குடைவரையை ஒட்டிய பகுதியில், பழங்கால கோவிலின் சிதைவுகள் வெளிப்பட்டன. நிலத்தடியில் புதையுண்டிருந்த கோவில் கல்துாண்கள், கோபுர கலசம், மேல்தள தாங்கு கற்கள், சங்ககால வகை செங்கற்கள், மண்பாண்ட சிதறல்கள், களிமண் கலவை சுவர் தோற்றம் ஆகியவை, முதல்முறையாக வெளிப்பட்டன. மீனவர் ஒருவர், செப்பு நாணயத்தை கண்டெடுத்தார். தொல்லியல் துறையினர், கல் துாண்கள், செங்கற்கள் ஆகியவற்றை, ஆய்விற்காக சேகரித்தனர். பின், கடல் உள்வாங்கி, மணற்பரப்பு உருவாகி, சிதைவுகள் நிலத்தடியில் புதையுண்டன. கடந்த ஆண்டு கடலரிப்பில் வெளிப்படாத நிலையில், தற்போது கடலரிப்பு ஏற்பட்டு, அவை மீண்டும் வெளிப்பட்டுள்ளன. சில நாட்களில், கடலரிப்பு அதிகரிக்கும்பட்சத்தில், முழுமையான சிதைவுகள் வெளிப்பட வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.