பதிவு செய்த நாள்
16
மே
2024
11:05
திருப்பூர் : வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, காவல் தெய்வமாகிய செல்லாண்டியம்மனிடம் உத்தரவு பெறும் நிகழ்ச்சியும், கிராமசாந்தியும் இன்று நடைபெறுகிறது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமள் கோவில் வைகாசி விசாகத்தேர்த்திருவிழா, அனைத்து சமுதாய மக்களின் பங்களிப்புடன் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. தேர்த்திருவிழாவுக்கான, கிராமசாந்தி மற்றும் வாஸ்துசாந்தி நிகழ்ச்சிகள் இன்று நடக்கின்றன. தேர்த்திருவிழா கொடியேற்றம், ஈஸ்வரன் மற்றும் பெருமாள் கோவில்களிலும் நாளை மாலை, சிறப்பு பூஜைகளுடன் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, தினமும், சுவாமிகளின் திருவீதியுலா நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கும். வாஸ்துசாந்தி மற்றும் கிராம சாந்தி பூஜைகள் துவங்கும் முன்னதாக, திருப்பூர் மக்களின் காவல் தெய்வமான செல்லாண்டியம்மனிடம் முன் அனுமதி பெறும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் செல்லாண்டியம்மன், தேர் ரத வீதிகளில் திருவீதியுலா வந்து, தேர்த்திருவிழா நடத்துவதற்கு உத்தரவு கொடுப்பதாக ஐதீகம். அம்மன் திருவீதியுலா வந்து சென்ற பின், நள்ளிரவு நேரத்தில், கிராமசாந்தி பூஜைகள் நடக்கும். தேர்த்திருவிழா துவங்க இருப்பதால், காப்பறையில் இருந்த உற்சவமூர்த்திகள் செப்புத்திருமேனிகள் நேற்று வெளியே எடுக்கப்பட்டன. பாரம்பரிய முறைப்படி, திருமேனிகள் துாய்மைப்படுத்தப்பட்டு, வழிபாட்டுக்கு தயார்படுத்தப்பட்டன. கொடியேற்றத்தை தொடர்ந்து, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், தேர்த்திருவிழா யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற உள்ளது.
யாகசாலை பூஜை: இதுகுறித்து, கோவில் தலைமை அர்ச்சகர்கள் தண்டபாணி, கண்ணன், சிவாச்சல சுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது: தேர்த்திருவிழாவை முன்னிட்டு, 17ம் தேதி முதல், யாகசாலை பூஜைகள் துவங்கும். தினமும் காலை, மாலை என, இரண்டு வேளையும், ஸ்ரீகணபதி, சிவபெருமான் -பார்வதி, முருகப்பெருமானுக்கு ேஹாமங்கள் நடக்கும். மொத்தம், 48 கலசங்களின் சுவாமிகளை எழுந்தருள செய்து, யாகபூஜை தொடர்ந்து நடக்கும். கொடியேற்றத்துடன் துவங்கி, மஞ்சள் நீர் பூஜை வரை, 22 காலபூஜைகள் நடக்கும். யாகசாலையில் உள்ள கலசங்களில் உள்ள புனித தீர்த்தத்தில், சுவாமிகளுக்கு மஞ்சள் நீர் அபிேஷகம் நடக்கும். தேரோட்டம் நடக்கும் நாளில் மட்டும், மாலை தேர் வடம் பிடிக்கப்படுவதால், காலை வேளையிலேயே, சுவாமி ரதத்துக்கு சென்றதும், இரண்டாவது வேள்வி பூஜைகளும் நடக்கும். பக்தர்கள், அனைத்து பூஜைகளிலும் பங்கேற்று, ஆதி அந்தமில்லா ஜோதி சொரூபனாகிய சிவபெருமானின் பேரருளுக்கு பாத்திரமாகலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.