பதிவு செய்த நாள்
21
மே
2024
12:05
ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப் படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும்.
வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.
*பிரம்மமுகூர்த்த வேளையில் (காலை4.30-6) மணிக்குள் எழுந்து நீராடவேண்டும்.
* நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால்,பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.
* முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வர வேண்டும்.
* திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.
* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.
* முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோயிலுக்கு குழுவாகச் செல்லலாம். ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் அரோகரா கோஷமிடலாம்.
* முருகன் கோயில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.