பதிவு செய்த நாள்
27
மே
2024
11:05
கூடுவாஞ்சேரி; காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கல்வாய் பகுதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் அக்னி வசந்த மகோற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, கடந்த 12ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, தினமும் நண்பகல் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மகாபாரத இலக்கிய சொற்பொழிவு நடந்தது. நேற்று, கோவிலில் உள்ள மூலவர் மற்றும் திரவுபதி அம்மனுக்கு, பலவிதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. மாலை நடந்த தீமிதி திருவிழாவில், காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பங்கேற்றனர். இரவு ஏழு மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மன் வீதி உலாவின் போது, சிறப்பு வாண வேடிக்கையும் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். காயார் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.