சபரிமலை பக்தர்களுக்கான காப்பீடு திட்டம் மாதாந்திர பூஜை காலத்திலும் விரிவாக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2024 05:05
சபரிமலை; மண்டல மகர விளக்கு காலத்தில் சபரிமலை பக்தர்களுக்காக செய்யப்படும் காப்பீடு திட்டம் மாதாந்திர பூஜை காலத்திலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்காக ஒரு குறிப்பிட்ட தூர அளவுக்குள் நடைபெறும் விபத்துகள், மரணம் ஆகியவற்றுக்கு காப்பீடு தொகை வழங்கும் வகையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது மண்டல மகர விளக்கு காலத்தில் மட்டும் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது மாதாந்திர பூஜை காலத்திலும் இது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்துதிருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது: பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டும், அவசர தேவைக்காகவும் ஆன்லைன் முன்பதிவு முறையை பயன்படுத்தும் பக்தர்களுக்கு காப்பீடு வசதி அறிமுகப்படுத்துகிறது. மண்டல மகர விளக்கு சீசனில் மட்டும் இத்திட்டம் செயல்பட்டு வந்த நிலையில் மாதாந்திர பூஜை காலத்திலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனி மாதம் நடை திறக்கும் போது பக்தர்களுக்கான இந்த திட்டம் அமலுக்கு வரும். இதற்காக பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்யும்போது பத்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். காப்பீட்டின் எல்கை அளவு விரிவு படுத்தப்படும். மாதாந்திர பூஜை காலத்தில் தினமும் 50,000 பேருக்கும் மண்டல - மகர விளக்கு சீசனில் 80 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும். சமூகமான தரிசனம் மற்றும் வசதிகளை உறுதி செய்வதற்காக இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வரிசையில் அழைத்துச் செல்லப்படுவார்கள். அப்பம் அரவணை கவுண்டர்களிலும் இனி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.