பதிவு செய்த நாள்
29
மே
2024
10:05
தஞ்சாவூர், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் 90ம் ஆண்டாக நடைபெறும் கருட சேவை நிகழ்ச்சி நேற்று 28ம் தேதி மதியம் 12 மணியளவில் வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது. பிறகு ,வெண்ணாற்றங்கரையிலிருந்து இன்று (மே 29ம் தேதி) காலை 6:00 மணியளவில் திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு, 7:00 மணி முதல் 12:00 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜ வீதிகளில் வீதி உலா நடைபெற்றது.
இதில், நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோவில்களிலிருந்து பெருமாள் எழுந்தருளி ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். பிறகு , நாளை (30ம் தேதி) காலை நவநீத சேவை நடைபெறவுள்ளது. இதில், வெண்ணாற்றங்கரையில் இருந்து 16 கோவில்களிலிருந்து பெருமாள் சுவாமிகள் எழுந்தருளி, ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கவுள்ளனர். வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் மே 31ம் தேதி காலை 9:00 மணியளவில் விடையாற்றி உற்ஸவம் நடைபெறவுள்ளது. இதனிடையே, இராஜராஜ சமய சங்கத்தில் மே 29ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு திருவாய்மொழி தொடங்கி, 30ம் தேதி இரவு 8:00 மணிக்கு சாற்று முறை நடைபெறுகிறது.