பதிவு செய்த நாள்
06
ஜூன்
2024
10:06
10 ஆண்டுகளாக தொடரும் தென்கயிலாய பக்தி பேரவையின் தூய்மைப் பணி தென்கயிலாய பக்தி பேரவை, கோவை மாவட்ட வனத்துறையின் உதவியோடு வெள்ளியங்கிரி மலை மற்றும் அதன் அடிவாரப் பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டது. கடந்த ஒரு மாத காலமாக வார இறுதி நாட்களில் நடைப்பெற்ற இந்த தூய்மைப் பணியின் மூலம் சுமார் 3.5 டன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும் தென்கயிலாய பக்தி பேரவை அமைப்பு 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக வெள்ளியங்கிரி மலை தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பெருமளவில் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை அனுமதி அளிக்கும் மாதங்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற முடியும். அந்த வகையில் வனத்துறை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாத இறுதி வரை மலையேற அனுமதி அளித்து இருந்தது. இந்த 4 மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை மேற்கொண்டனர்.
இவ்வாறு பக்தர்கள் மிக அதிக அளவில் வந்து செல்வதால் வெள்ளியங்கிரி மலைப் பாதைகளில் குப்பைகளும் அதிக அளவில் சேர்ந்து விடுகின்றன. இதனை ஆண்டுதோறும் அகற்றி மலையை தூய்மைப்படுத்தும் பணியில் தென் கயிலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தென்கயிலாய பக்தி பேரவையின் சார்பாக இந்தப் பணிகளை ஒருங்கிணைத்த குழுவில் இருந்த திரு. விஜயபாஸ்கர் அவர்கள் இது குறித்து கூறுகையில் “எங்கள் அமைப்பு சார்பாக இந்த ஆண்டு, கடந்த மே 2 முதல் ஜூன் 2 வரை, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும், சிவன் அடியார்களும் ஈடுபட்டனர். குறிப்பாக கடந்த மே மாதம் 26 ஆம் தேதி ஒரே நாளில் நடைப்பெற்ற மெகா தூய்மைப் பணியில் சென்னை, செங்கல்பட்டு, உத்திரமேரூர், வந்தவாசி, தஞ்சாவூர், திருப்பட்டூர் ஆகிய பல்வேறு ஊர்களைச் சேர்ந்த சிவனடியார்கள் ஈடுபட்டனர்.
ஏழு மலைகளை கொண்ட இந்த வெள்ளியங்கிரியில் நாங்கள் 6-வது மலை வரை சென்று குப்பைகளை சேகரித்து கீழு கொண்டு வந்துள்ளோம். இந்தப் பணியில் தன்னார்வலர்கள் இரண்டு குழுக்களாக ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு குழு மேலோட்டமாக இருக்கும் குப்பைகளை சேகரிக்கும் விதமாகவும், மற்றொரு குழு நுண்ணிப்பாக குப்பைகளை சேகரிக்கும் விதமாகவும் ஈடுபடுத்தப்பட்டது.
இந்த தூய்மைப் பணியின் மூலம் சுமார் 3.5 டன் அளவிலான குப்பைகள் மலைகளில் இருந்து சேகரிக்கப்பட்டு கீழே கொண்டு வரப்பட்டது. இந்த குப்பைகளில் சாக்லேட் கவர்கள், சிறிய பிளாஸ்டிக் கவர்கள், பிஸ்கட் பாக்கெட் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள் ஆகியன அடங்கும். இவை அனைத்தும் இறுதியாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆண்டு மே 31 ஆம் தேதியோடு பக்தர்கள் மலையேறுவதற்கான அனுமதி முடிவடைந்தது. இறுதியாக எங்கள் தன்னார்வலர்கள் குழு மலையேறி மீதமிருந்த குப்பைகளை சேகரித்துக் கொண்டு வந்தோம். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கோவை மாவட்ட வனத்துறையின் உரிய அனுமதியோடும், உதவியோடும் இந்தப் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் ” என அவர் கூறினார். தென்கயிலாய பக்தி பேரவை 2014 ஆம் ஆண்டு முதல் வெள்ளியங்கிரி மலை தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த அமைப்பின் மூலம் தமிழகத்தில் நாயன்மார்கள் பவனி, சிவயாத்திரை மற்றும் பல்வேறு ஊர்களில் இருக்கும் கோவில்களில் ஊழவாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.