பதிவு செய்த நாள்
09
ஜூலை
2024
10:07
63 நாயன்மார்களில் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் ஒன்பதாம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் பாடிய திருவாசகம் உலகப்புகழ் பெற்றதாகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என கூறுகின்றனர். ஆண்டுதோறும் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் மாணிக்கவாசகரின் குருபூஜை விழா நடக்கிறது.
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர்.இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் 9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பதினாறு ஆண்டுகள் நிரம்புமுன் இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார். மாணிக்கவாசகர் கூறிய திருவாசகத்தை சிவபெருமானே எழுதினார். 8ம் திருமுறையில் உள்ள திருவாசகமும், திருக்கோவையாரும் மாணிக்கவாசகரால் பாடப்பட்டது. ஞானநெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.