சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்; தூய்மை, பொறுமை, விடாமுயற்சி மூன்றும் இருந்தால் வெற்றி நிச்சயம்!
பதிவு செய்த நாள்
04
ஜூலை 2024 10:07
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர் சுவாமி விவேகானந்தர்; இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. சிறு வயதிலேயே தியானம் பழகினார். கோல்கட்டாவில் உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லுாரியில் தத்துவம் பயின்றார்.ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டு ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராக மாறினார். 1886ல் ராமகிருஷ்ணர் மறைவுக்கு பின், நான்கு ஆண்டுகள் நாடு முழுதும் சுற்றி ஆன்மிக சொற்பொழிவாற்றினார். இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடைய செய்தன. இந்தியா மட்டுமின்றி மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவம் குறித்து பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893-ல், அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த உலக மத மாநாட்டில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பெரும் புகழ் பெற்றது. மூன்றரை ஆண்டுகள் 1897 ஜனவரி வரை, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற தேசங்களில் பயணம் செய்து அறவுரைகள் ஆற்றினார் விவேகானந்தர். குட்வின் என்ற ஆங்கில சுருக்கெழுத்தாளர், விவேகானந்தரின் அறஉரைகளை, எழுச்சி உரைகளை எழுதி வைத்து, மனித குலத்திற்கு பெரும் தொண்டாற்றினார். பல மேலை நாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் விவேகானந்தரின் சீடராகி, அவர் பணி தொடர வழிவகுத்தனர். மார்க்கெரட் நோபல் என்ற ஐரிஷ் பெண்மணி, அவரது மாணவியாகி சகோதரி நிவேதிதை என பெயர் சூட்டப்பட்டு, பாரதம் வந்து, தன் கடைசி மூச்சு வரை தொண்டு புரிந்தார்.விவேகானந்தர் 1897 ஜனவரியில் இலங்கை வழியாக தாயகம் திரும்பினார். பானகர சேதுபதி ஆண்ட ராமநாதபுரம் சமஸ்தானத்தில் முதலடி எடுத்து வைக்க வேண்டும் என விவேகானந்தர் விரும்பினார். 1897 ஜன., 26 ராமநாதபுரம் அருகே குந்துகாலில் விவேகானந்தர் கப்பலில் வந்து இறங்கினார். பாஸ்கர சேதுபதி தலைமையில் மக்கள் அவரை வரவேற்றனர். விவேகானந்தர் ஏறி வந்த சாரட்டு வண்டியின் குதிரைகளை அவிழ்த்து விட்டு தானே அதை இழுத்து மரியாதை செலுத்தினார். ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, குடந்தை வழியாக சென்னைக்கு ரயிலில் சென்றார் விவேகானந்தர். பாரதத்தின் எதிர்காலம், அதன் கடந்த காலத்தை விடஒளிமயமாக இருக்கும் என பேசினார். சென்னையில் இன்று விவேகானந்தர் இல்லம் என்று புகழ்பெற்ற, ஐஸ் ஹவுஸில் ஒன்பது நாட்கள் தங்கி வீர உரைகளை அவர் ஆற்றினார். 1897பிப்., கொல்கட்டா புறப்பட்டார். அவரது உரைகள், இந்திய பிரசங்கங்கள் என பெயரில் புகழ்பெற்றன. 1897ல் தொண்டும் துறவும் என்ற மைய சிந்தனையுடன், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் என்ற ஆன்மிக தொண்டு நிறுவனம், சுவாமி விவேகானந்தரால் துவங்கப்பட்டது. ஹிந்து மதத்தின் புகழை உலக அரங்கில் நிலைநிறுத்தினார். ராமகிருஷ்ணர் மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார். 1902 ஜூலை 4-ம் தேதி தன் 39-ம் வயதில் இறைவனடி சேர்ந்தார். அவர் இறந்த தினம் இன்று.
|