பதிவு செய்த நாள்
12
ஜூலை
2024
06:07
பல்லடம்; நூற்றாண்டுக்குப் பின் திருப்பணி துவங்க உள்ள நிலையில், பல்லடம் கடைவீதி மாகாளியம்மன் கோவிலில் இன்று பாலாலயம் நடந்தது.
பல்லடம் கடைவீதி மாகாளியம்மன் கோவில், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கோவில் கருவறை தாழ்வாக இருப்பதாலும், கோவில் சுற்றுச்சூழல் உள்ளிட்டவை சிதலமடைந்து காணப்படுவதாலும், கும்பாபிஷேகம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, திருப்பணி துவங்க பக்தர்கள் திட்டமிட்டனர். இருப்பினும், பல ஆண்டுகளாக திருப்பணி மேற்கொள்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தது. நீண்ட இடைவெளிக்கு பின், திருப்பணி துவங்க திட்டமிடப்பட்டு, இன்று பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது. அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஹர்ஷினி தலைமை வகித்தார். செயல் அலுவலர் ராமசாமி மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, காலை 9.00 மணிக்கு, தீர்த்த கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோவிலை வலமாக எடுத்துவரப்பட்டன. தொடர்ந்து, அருள் சக்திகள் பிம்பத்தில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வு நடந்தது. பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களால் அபிஷேகமும், இதனையடுத்து தீபாராதனையும் நடந்தது. பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், பக்தர்கள், பொதுமக்களின் பங்களிப்புடன் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு பாலாலயம் நடந்துள்ளது. தொடர்ந்து, வரும், 18ம் தேதி கோவில் முன்புறம் உள்ள கடைகள் அகற்றப்பட்டு திருப்பணிக்கான வேலைகள் துவங்கும் என்றனர்.