ஆடி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு; நெய் அபிஷேகம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2024 10:07
சபரிமலை; ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறந்தது, கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தனர்.
சபரிமலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது. வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 20 வரை வழக்கமான உஷ பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்ச பூஜை, மாலை தீபாராதனை நடைபெற்றது. இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறும். எல்லா நாட்களிலும் காலை முதல் மாலை வரை உதயாஸ்தமன பூஜையும், இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடைபெறும். 20 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். சபரிமலையில் நேற்று நல்ல மழை பெய்தது. எனினும் திரளான பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.