பதிவு செய்த நாள்
16
ஜூலை
2024
10:07
புதுடில்லி; புனித மானசரோவர் யாத்திரைக்கு செல்லும் இரண்டு வழிகளை சீனா கடந்த ஐந்து ஆண்டுளாக அடைத்துள்ள நிலையில், நேபாளம் வழியாக செல்லும் மூன்றாவது வழியையும் தற்போது மூடி இருப்பது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து உள்ளது. இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையையும், அங்குள்ள மானசரோவர் ஏரியையும் தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் ஏராளமான ஹிந்துக்கள் கைலாஷ் – மானசரோவர் புனித யாத்திரை செல்கின்றனர்.
உத்தரகண்ட் எல்லையில் உள்ள லிபுக் கணவாய் வழியாகவும், சிக்கிமில் உள்ள நாதுலா கணவாய் வழியாகவும் செல்லும் இந்தியர்கள், அதன் பின் சீன எல்லை கடந்து செல்வது வழக்கம். மூன்றாவது வழியாக நம் அண்டை நாடான நேபாளம் வழியாக சென்று சீன எல்லையைக் கடந்தால் மட்டுமே கைலாய மலையை தரிசிக்கமுடியும். கடந்த 2020ல் இந்தியா – சீனா மோதலால், இரு நாட்டு உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2020 முதல் லிபுக் கணவாய் மற்றும் நாதுலா கணவாய் பாதையில் உள்ள சீன எல்லை மூடப்பட்டது. இதனால், கடந்த நான்கு ஆண்டுகளாக நேபாளம் வழியாகவே இந்திய பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வந்தனர். கடந்த ஆண்டு, இந்த வழியாக செல்லும் இந்தியர்களை தடுப்பதற்காகவே சீனா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த ஆண்டு, இந்தக் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு மேலும் கடுமையாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி, மானசரோவர் செல்வதற்கான சீன எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டு வருவது இரு நாட்டு உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.