பதிவு செய்த நாள்
25
ஜூலை
2024
12:07
போத்தனூர்; குறிச்சி அரவான் திருவிழாவை நடத்த அனுமதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குறிச்சியில் அனைத்து சமூகத்தாரும் இணைந்து ஆண்டுதோறும் அரவான் திருவிழாவை நடத்துவர். ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான இவ்விழா கடந்தாண்டு, சில சமூக தலைவர்களின் எதிர்ப்பால் நடக்கவில்லை. மதுக்கரை தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து விழா குறித்து எந்தவொரு சமூகத்தாரும் கூட்டம் நடத்தக்கூடாது. மீறி கூட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் சார்பில் எதிர்ப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் முருகா நகரை சேர்ந்த வடிவேல் சென்னை ஐகோர்ட்டில் விழா நடத்த போலீஸ் அனுமதி கோரி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர், போத்தனூர் சரக உதவி கமிஷனர், போத்தனூர், சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி, கடந்த, 23ம் தேதி முதல் விழா நடத்தவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவை மாநகர போலீசார் மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
இதுகுறித்து வடிவேல் கூறுகையில், " அரவான் திருவிழா நூற்றாண்டுகட்கும் மேலாக நடந்து வருகிறது. ஒரு சிலரின் எதிர்ப்பால் கடந்தாண்டு நடக்கவில்லை. அதனை கருத்தில்கொண்டு போலீசார் விழாவிற்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து, 4ம் தேதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். 23ம் தேதி முதல் விழா நடத்தவும், போலீஸ் பாதுகாப்பு தரவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தீர்ப்பு நகல் நேற்று ( 24ம் தேதி) இரவு தான் கிடைத்தது. அனைத்து தரப்பினரிடமும் இதுகுறித்து பேசி, உடனடியாக விழா நடத்த ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.