பதிவு செய்த நாள்
12
ஆக
2024
10:08
சபரிமலை: சபரிமலையில், இன்று அதிகாலை, நிறைபுத்தரிசி பூஜை நடந்தது; திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் நடந்தது. பின், நிறைபுத்தரிசி பூஜைகளுக்கான சடங்கு துவங்கியது.
நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று (ஆக.,11) மாலை திறக்கப்பட்டது. இன்று(ஆக.,12) காலை தந்திரி மகேஷ் மோகனரரு தலைமையில் பூஜை நடைபெற்றது. அனைத்து ஆடி மாதங்களிலும் சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான பாலக்காடு மற்றும் அச்சன் கோயில் வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்களை அறுவடை செய்து பவனியாக சபரிமலை கொண்டு வந்து ஐயப்பனுக்கு இந்த பூஜை நடத்தப்படுகிறது. இதற்காக நேற்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து நெற்கதிர்கள் சன்னிதானத்திற்கு கொண்டுவரப்பட்டது. வேறு விசேஷ பூஜைகள் நடைபெறவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் நிறை புத்தரிசி பூஜை சடங்குகள் தொடங்கியது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நெற்கதிர்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து சன்னதிக்குள் கொண்டு வந்தார். அங்கு நெற்கதிர்களுக்கு தந்திரி மகேஷ் மோகனரரு பூஜைகள் நடத்தினார். தொடர்ந்து, அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின், வழக்கமான நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.