தசரா திருவிழா முன்னேற்பாடு: மைசூரு புறப்பட்ட 9 யானைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2024 01:08
ஹுன்சூரு: தசரா விழாவில் பங்கேற்பதற்காக, முதல் கட்டமாக, ஒன்பது யானைகள், காட்டில் இருந்து, மைசூரு நகருக்கு நேற்று புறப்பட்டன.
உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, அக்டோபர் 3ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்கிறது. இம்முறை நல்ல மழை பெய்துள்ளதால், மாநிலம் செழிப்பாக உள்ளது. எனவே தசரா விழாவை இந்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கு, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. தசரா விழாவின் பிரதான அடையாளமான ஜம்பு சவாரி ஊர்வலத்தில், 14 யானைகள் பங்கேற்கின்றன. இதற்காக, வெவ்வேறு வனப்பகுதியில் இருந்து, மூன்று கட்டங்களாக யானைகள் மைசூருக்கு அழைத்து வரப்படுகின்றன.
தங்க அம்பாரி; முதல் கட்டமாக, தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியை சுமக்கும் அபிமன்யூ உட்பட ஒன்பது யானைகளை, மைசூருக்கு அனுப்பும் நிகழ்ச்சி மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவின் வீரனஹொசஹள்ளி கிராமத்தில் நேற்று நடந்தது. சமூக நலத்துறை அமைச்சரும், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மஹாதேவப்பா, யானைகளுக்கு மலர் துாவி, மைசூரு அனுப்பி வைத்தார். பின், அவர் கூறியதாவது: முதல் கட்டமாக, அபிமன்யூ தலைமையில், கஞ்சன், ஏகலைவா, பீமா, லட்சுமி, வரலட்சுமி, ரோஹித், தனஞ்செயா, கோபி ஆகிய யானைகள் மைசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மைசூரு அசோகபுரத்தில் உள்ள அரண்ய பவனில் தங்க வைக்கப்பட்டு, ஆக., 23ல் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படும்.