பதிவு செய்த நாள்
19
நவ
2012
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவில், தீபத் திருவிழா கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்படும், ஆளில்லா குட்டி விமானத்தின், சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 24ம் தேதி தேரோட்டமும், 27ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
தீபத் திருவிழாவை காண வரும், பக்தர்களின் வசதிக்காக, பல்வேறு பகுதிகளிலிருந்து, 2,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதற்காக, நகரின் முக்கிய பகுதிகளில், ஒன்பது தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.திருவிழாவின் போது, நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் இடங்கள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டத்தை கண்டறிவது போன்ற பணிகளுக்கு, ஆளில்லாத குட்டி விமானத்தை பயன்படுத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, ஆளில்லா குட்டி விமானத்தை இயக்கி, கண்காணிப்பதற்கான சோதனை ஓட்டம், நேற்று அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் நடந்தது.
மூன்று கிலோ எடையளவு கொண்ட ஆளில்லா குட்டி விமானத்தில், ஜி.பி.ஆர்.எஸ்., தகவல் தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குட்டி விமானம், ஒரு முறை, ஐந்து கி.மீ., தூரம் வரை பறந்து சென்று, கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வகையில், அதன் பேட்டரி செயல்பாடு இருக்கும்.எம்.ஐ.இ.டி., கல்லூரியைச் சேர்ந்த குழுவினர், ஆளில்லா குட்டி விமானத்தை இயக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.