பதிவு செய்த நாள்
19
நவ
2012
11:11
மேட்டூர்: பனிரெண்டு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அழைப்பிதழ் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. மேச்சேரி இறையருள் நற்பணி மன்றம் சார்பில், நான்கு ஆண்டுகளாக, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி நடந்தது. கோவிலில், 71 அடி உயர ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம், கருவறை, சுற்று பிரகாரம், சமையல் கூடம் என மொத்தம், 12 கோடி ரூபாய் செலவில், கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், 2013 ஜனவரி, 23ம் தேதி (தை மாதம்10ம் தேதி) காலை, 6.45 முதல், 7.25 மணிக்குள் நடக்கிறது. நேற்று காலை, கும்பாபிஷேகத்துக்கான அழைப்பிதழை அம்மனுக்கு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், கும்பாபிஷேக அழைப்பிதழ் இறையருள் நற்பணி மன்ற நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், இறையருள் நற்பணி மன்ற செயலாளர் ராமசாமி வரவேற்றார். தலைவர் அம்மாசி தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி., அர்ஜூனன், மேட்டூர் எம்.எல்.ஏ., பார்த்திபன், இறையருள் நற்பணிமன்ற துணை தலைவர்கள் கலையரசன், ராஜா, பொருளாளர் ஆறுமுகம், மேச்சேரி டவுன் பஞ்., தலைவர் குமார், ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.