பதிவு செய்த நாள்
19
நவ
2012
12:11
சபரிமலை: சபரிமலையை சுத்தமாக பராமரிக்க, பக்தர்கள் வீட்டுக்கு திரும்ப செல்லும் போது, "ஒரு முடிகட்டு என்ற திட்டத்தை, கேரள போலீஸ், திருவிதாங்கூர் தேவசம்போர்டு இணைந்து அறிமுகம் செய்ய உள்ளது.சபரிமலையில் 67 ஏக்கர் நிலம் மட்டுமே, தேவசம்போர்டு வசம் உள்ளது. இங்கு 30 ஆயிரம் ஊழியர்கள் தங்குகின்றனர். ஆண்டுதோறும், 60 நாட்களில் ஒன்றரை கோடி பக்தர்கள் வந்து செல்கின்றனர். முன்பு, பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது; பாலிதீன் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பிகளும் இல்லை. தற்போது, பாலிதீன் மயமாகிவிட்டது. இவற்றை பக்தர்கள் விட்டுச் செல்வதால், வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது; மண் வளமும் பாதிக்கப்படுகிறது.இதை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு "புண்ணியம் பூங்காவனம் திட்டத்தை, சபரிமலை போலீஸ் அதிகாரி விஜயன் அறிமுகம் செய்தார். இத்திட்டத்தின்படி, தினமும் இரண்டு மணி நேரம், சபரிமலையில் குப்பையை அகற்றும் பணியில், அனைவரும் ஈடுபட வேண்டும். அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட வி.ஐ.பி., க்களும் இப்பணியில் ஈடுபட்டனர்.
அடுத்த கட்டமாக, பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களின் கழிவுகளை, திரும்ப வீட்டுக்கு எடுத்து செல்லும், "ஒரு முடிகட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களின் கவர்கள், பழத்தோல், அவல், பொரி போன்றவற்றை திரும்ப எடுத்து செல்ல வேண்டும். இதற்காக துணிப்பை, நடைப்பந்தலில் வழங்கப்படும். அதில் கழிவுகளை போட்டு, திரும்ப வீட்டுக்கே எடுத்து செல்ல வேண்டும். போலீஸ் அதிகாரி விஜயன் கூறுகையில், ""ஸ்பான்சர் மூலம் "ஓரு முடிகட்டு க்கான பைகள் பெறப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும். கழிவுகளை வெளியே போடும் கடைக்காரர்களுக்கு, வழக்கு தொடர்வதற்கான எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது, என்றார்.