பதிவு செய்த நாள்
02
செப்
2024
03:09
வயதானவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை என்னவென்றால், எனது கடமை முடிந்து விட்டது. இனி காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சென்று வரலாம் என்று இருக்கிறேன் என்பர். காசியில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரம்மாண்ட காசி விஸ்வநாதேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. காசிக்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள, காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்கின்றனர். பெங்களூரு அருகே, தென்னக காசி என்று அழைக்கப்படும் சிவன் கோவில் உள்ளது. அதை தரிசிக்க செல்வோமா.
சிவலிங்கங்கள்; பெங்களூரில் இருந்து 70 கி.மீ., துாரத்தில் உள்ளது கோலார். இங்கு, அந்தரகங்கே எனும் மலை உள்ளது. இந்த மலையில் 1,000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த இடத்தை, தென்னகத்தின் காசி என்று பக்தர்கள் அழைக்கின்றனர். கோவில் கருவறையில் சிவலிங்கம் உள்ளது. பிரதான மண்டபங்கள் பக்கத்தில் ஐந்து சிவலிங்கங்கள் உள்ளன. கோவிலை ஒட்டி சிறிய குளம் அமைந்துள்ளது. குளத்திற்கு நடுவில் விநாயகர் கோவில் உள்ளது. விநாயகருக்கு பக்கத்தில் இரண்டு நந்தி சிலைகள் உள்ளன. சிலைகளுக்கு இடையில் இருந்து தண்ணீர் ஆண்டுதோறும் விழுந்து கொண்டே இருக்கிறது. நோய் தீர்க்கும் அந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. சிவனின் தலையிலிருந்து அந்த தண்ணீர் வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீரை பாத்திரங்களில் பிடித்து செல்கின்றனர். அந்த நீரை தொடர்ந்து குடித்தால், நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கோவில் அமைந்துள்ள மலையின் உச்சிக்கு சென்று பார்த்தால், கோலார் நகரில் அழகை கண்டு ரசிக்கலாம். அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு 300 படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டும். செல்லும் வழியில் பக்தர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மலைக்கு செல்லும் வழியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இதனால், பக்தர்கள் தங்களின் உடைமைகளை கவனமாக எடுத்து செல்ல வேண்டும். கோவில் தினமும் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்து இருக்கும். பெங்களூரில் இருந்து கோலாருக்கு அரசு, தனியார் பஸ் சேவை உள்ளது. -- நமது நிருபர் - -.