பதிவு செய்த நாள்
02
செப்
2024
03:09
சிக்கமகளூரு மாவட்டம், கலசா தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஹொரநாடு கிராமத்தில் பத்ரா ஆற்றின் அருகில் அன்னபூர்ணேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. 2,726 அடி உயரத்தில் உள்ள இந்த கோவிலில், 8ம் நுாற்றாண்டில் அகஸ்தியர் மஹரிஷி, அன்னபூர்னேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார். புராணங்கள்படி, சிவன் - பார்வதி இடையே சண்டை ஏற்பட்டது. உணவு உட்பட உலகில் உள்ள அனைத்தும் மாயை என்று சிவபெருமான் அறிவித்தார். உணவு மாயை அல்ல என்று நிரூபிப்பேன் என கூறி, பார்வதி தேவி மறைந்ததால், இயற்கை அமைதியானது.
பெரும் வறட்சி; காலநிலை மாறவில்லை; தாவரங்கள் வளரவில்லை. இது உலகளவில் பெரும் வறட்சியை ஏற்படுத்தியது. இதை பார்த்த, பார்வதி தேவி மீண்டும் தோன்றி, அனைவருக்கும் உணவு வழங்கினார். அன்றிலிருந்து அவள், அன்னபூர்ணேஸ்வரி அன்று அழைக்கப்படுகிறார். மற்றொரு தரப்பினர், சிவபெருமான், பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒரு தலையை துண்டித்ததாகவும், அந்த தலை, சிவபெருமானின் கையில் ஒட்டி கொண்டதாகவும், அந்த மண்டை ஓட்டில் உணவு தானியங்கள் நிரம்பாத வரை, அது கைகளிலேயே ஒட்டி இருக்கும் என்றும் பிரம்மா சாபமிடுகிறார். சிவபெருமான் பல இடங்களுக்கு சென்றும் மண்டை ஓடு நிரம்பவில்லை. இறுதியாக இக்கோவிலுக்கு வந்தார். தாய் அன்னபூர்ணேஸ்வரி, தானியங்களால் நிரப்பி, சிவபெருமானின் சாபத்தை போக்கினார் என்றும் கூறப்படுகிறது.
அக் ஷய திருதியை; கடந்த 400 ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக தர்மகர்த்தா குடும்பத்தினர் கோவிலை வழிநடத்தி வருகின்றனர். கோவிலை சீரமைப்பதிலும், சடங்குகள் செய்வதிலும் தர்மகர்த்தாவுக்கு முக்கிய பங்கு உண்டு. தற்போது ஐந்தாவது தலைமுறையாக ஸ்ரீவெங்கடசுப்பா உள்ளார். 1973ல் அக் ஷய திருதியை அன்று, அன்னபூர்ணேஸ்வரியின் புதிய விக்ரஹரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து கொண்டே உள்ளது. இங்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
கோவிலுக்கு வரும் ஆண் பார்வையாளர்கள், தங்கள் சட்டை, பனியன்களை கழற்றிய பின்னரே, அன்னபூர்ணேஸ்வரியை தரிசிக்க வேண்டும். இந்த தேவியை தரிசித்தால், வாழ்வில் உணவு பற்றாக்குறை ஏற்படாது என்று மக்கள் நம்புகின்றனர். அக் ஷய திருதியை நாளை, இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த நாளை அன்னபூர்ணேஸ்வரி பிறந்த நாளாகவும் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரியில் ஐந்து நாட்கள் ரத உற்சவமும்; செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஒன்பது நாட்கள் நவராத்திரி திருவிழாவும், தீப உற்சவமும் கொண்டாடுகின்றனர். கோவில் மூலஸ்தானத்தை சுற்றிலும் ஆதிசேஷன் விக்ரஹங்கள் சூழ்ந்திருக்கும். இக்கோவிலில் தினமும் காலை 9:00 மணி; மதியம் 1:30 மணி; இரவு 9:00 மணிக்கு மஹா மங்களாரத்தி காண்பிக்கப்படும். காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை குங்கும அர்ச்சனை நடக்கிறது.
எப்படி செல்வது?; விமானத்தில் செல்வோர், பெங்களூரில் இருந்து மங்களூரு சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக 125 கி.மீ., தொலைவில் உள்ள இக்கோவிலுக்கு செல்லலாம். பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், மங்களூரின் பண்ட்வாலுக்கு சென்று, அங்கிருந்து பஸ், டாக்சியில் ஹொரநாடு செல்லலாம். பெங்களூரு, மைசூரு, ஷிவமொகா, மங்களூரு உட்பட மாநிலத்தின் பல முக்கிய நகரங்களில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி., மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. - நமது நிருபர் -.