சதுர்த்தி விழா; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2024 05:09
பிள்ளையார்பட்டி; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு கற்பக விநாயகர் நடத்திய கஜமுக சூரசம்ஹாரத்தை பக்தர்கள் திரளாக தரிசித்தனர்.
இக்கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். ஆக.29ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி காலையில் வெள்ளிக்கேடகத்தில் விநாயகர் எழுந்தருளி புறப்பாடு நடக்கிறது.இரவில் வாகனங்களில் விநாயகர் எழுந்தருளி திருவீதி வலம் நடக்கிறது. இன்று ஆறாம் திருநாளை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு உற்ஸவ விநாயகர் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளில கோயில் கிழக்கு ராஜகோபுர மண்டபம் எழுந்தருளினார். மூலவர் சன்னதியில் பூஜிக்கப்பட்ட தந்தம் உற்ஸவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சார்யர்களால் சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. பின்னர் சூரனை சந்திக்க விநாயகர் புறப்பாடு துவங்கியது. பின்னர் கிழக்கு கோபுரம் எதிரே உலாவிய சூரனை விநாயகர் எதிர் கொண்டார். தொடர்ந்து கோயிலை வலம் வந்து கோயில் குளத்தின் வடகரையில் எழுந்தருளினார். யானை முகத்தில் இருந்த சூரனை தந்தத்தால் தலையை கொய்து கஜமுக சூரசம்ஹாரத்தை நிகழ்த்தினார். தொடர்ந்து சூரனை வதம் செய்த விநாயகர் சூரனை மூஷிகமாக்கி அதில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி சிவாச்சரர்யர்களால் சிறப்பு பூஜைகள் செய்து தீபராதனை நடந்தது. செப்.6 மாலையில் தேரோட்டமும், மூலவர் சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும். செப்.7 ல் காலையில் தீர்த்தவாரி, மதியம் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையல், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.