பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று தேரோட்டம் : நாளை தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2024 06:09
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை தேரோட்டமும், மூலவர் சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறும். நாளை காலையில் சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெறும் நகரத்தார் குடவரைக்கோயிலான இங்கு விநாயகர் சதுர்த்திப் பெருவிழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் வெள்ளிக்கேடகத்தில் விநாயகர் புறப்பாடும், இரவில் சிம்மம்,பூதம்,கமலம், ரிஷபம்,யானை,மயில்,குதிரை வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. ஆறாம் திருநாளில் கஜமுகசூரசம்ஹாரம் நடந்தது. நேற்று குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று 9ம் திருநாளில் தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 8:30 மணிக்கு மேல் விநாயகர், சண்டிகேஸ்வரர் தேரில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு மேல் தேர் வ டம் பிடித்து தேரோட்டம் துவங்குகிறது. அதே நேரத்தில் மாலை 4:00 மணிக்கு ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தை பக்தர்கள் தரிசிக்க துவங்கலாம். இரவு 10:30 மணி வரை தரிசிக்க அனுமதி உண்டு.நாளை காலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் குளத்தில் காலை 9:30 மணிக்கு மேல் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி உத்ஸவம் துவங்கும், மதியம் 1:30 மணி அளவில் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையல், இரவு 11:00 மண அளவில் வில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.