சென்னை; ‘வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட குழந்தை கிருஷ்ணர் சிலை, 19 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ள நிலையில், அது எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது குறித்து தகவல் தெரிவிக்கலாம்’ என, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
அமெரிக்க வாழ் இந்தியரான சுபாஷ் சந்திர கபூர், தமிழகத்தில் சுற்றுலா பயணி போல வலம் வந்து, ஏராளமான சுவாமி சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை வெளிநாட்டிற்கு கடத்தி உள்ளார். அவற்றை எல்லாம், மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு வருகின்றனர். அந்த வகையில், 2005ல், சுபாஷ் சந்திர கபூரால், தாய்லாந்து வழியாக அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட, பாம்பின் மீது நடனமாடும் குழந்தை கிருஷ்ணர் உலோக சிலையை, 19 ஆண்டுகளுக்கு பின்மீட்டுள்ளனர்.கலைநயமிக்க, 11 – 12ம் நுாற்றாண்டை சேர்ந்த இச்சிலையை சுபாஷ் சந்தர கபூர், 2005ம் ஆண்டிலேயே, தாய்லாந்தைச் சேர்ந்த நபருக்கு, 5.20 கோடி ரூபாய்க்குவிற்றுள்ளார். மீட்கப்பட்டுள்ள கிருஷ்ணர் சிலையானது, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் வாயிலாகபாதுகாக்கப்பட்டு வருகிறது.ஆனால், இச்சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது தெரியவில்லை. இதுகுறித்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சிலை குறித்து தகவல் தெரிந்தோர், சென்னை அசோக் நகர் நடேசன் சாலையில் உள்ள, போலீஸ் பயிற்சி கல்லுாரியில் செயல்படும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்று, தகுந்த ஆதாரங்களுடன் தகவல் தெரிவிக்கலாம் என, அறிவித்துள்ளனர். போலீசார் கூறுகையில், ‘திருடு போன கோவிலில் சிலையை ஒப்படைத்தால் தான், எங்கள் பணி முழுமை பெரும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ‘குழந்தை கிருஷ்ணர் சிலை குறித்து, சில தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை சரி பார்த்துவருகிறோம்’ என்றனர்