கும்பாபிஷேகம் நடந்த 3ம் நாளில் திருட்டு; மேலப்பிடாவூர் வெள்ளாரப்பன் கோவிலில் பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2024 11:09
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பிடாவூர் கிராமத்தில் உள்ள பூர்ணா தேவி,புஷ்கலா தேவி சமேத வெள்ளாரப்பன் (எ)முத்தையா அய்யனார் கோயிலில் கருங்கல்லில் கும்பாபிஷேக பணிகள் மற்றும் மராமத்து பணிகள் நடைபெற்று வந்து முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 6ம் தேதி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.இதனைத் தொடர்ந்து கடந்த 2நாட்களாக 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. 8ம் தேதி அதிகாலை பூஜைகள் முடிவு பெற்று பூர்ணாஹூதி நடைபெற்று யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கடங்களை செல்லப்பா குருக்கள் தலைமையிலான ஏராளமான சிவாச்சாரியார்கள் மேள,தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை சுற்றி வலம் வந்து ராஜகோபுரத்திற்கும், பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கும் புனித நீரை கொண்டு சென்றனர்.பின்னர் காலை 8: 20 மணிக்கு புனித நீரை கோபுர கலசங்களின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இந்நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற வெள்ளாரப்பன் (எ) முத்தையா அய்யனார் கோவில் கதவை உடைத்து 5 கிலோ வெள்ளிக்கவசம், 30 கிலோ பித்தளை, வெண்கல பொருட்கள் திருட்டு நடைபெற்றுள்ளது. கும்பாபிஷேகம் நடந்த 3ம் நாளில் கோவிலில் திருட்டு நடைபெற்றது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலிஸார் விசாரனை செய்து வருகின்றனர்.