திருச்சுழி குண்டாற்றில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2024 04:09
திருச்சுழி; திருச்சுழி திருமேனி நாதர் சாமி கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி குண்டாற்றில் நேற்று இரவு நடந்தது.
பிட்டு மற்றும் பலகாரங்கள் விற்பனை செய்கிற பாட்டி வந்தியம்மைக்கு உதவி செய்ய வேண்டி மனித உருவில் சிவபெருமான் பாட்டி தந்த பிட்டுவை பெற்றுக் கொண்டு அதற்கு கூலிக்காக வேலை செய்ய ஆற்றின் கரைக்கு வந்தவர் பிட்டு உண்ட மயக்கத்தில் அங்குள்ள மரத்தடியில் உறங்கிய சிவபெருமானை பாண்டிய மன்னன் பிரம்பால் அடித்த திருவிளையாடலே பிட்டுக்கு மண் சுமந்த படலம். உலக மக்களுக்கு தான் இருப்பதை காட்டவும், தன்னையே எண்ணி தஞ்சம் அடைந்தவர்களுக்கு உதவிட உடனடியாக வருவேன் என்பதை உணர்த்திடவும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று அனைத்து சிவன் கோயில்களிலும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் கொண்டாடப்படுகிறது. திருச்சுழி கோயிலிலும் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி குண்டாற்றில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமி மற்றும் அம்மன் வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின் கோயிலுக்கு வந்த சுவாமி மற்றும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.