பதிவு செய்த நாள்
17
செப்
2024
04:09
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாதம் துவங்கியதை அடுத்து, காரமடை அரங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ஏகாதசி, மாசி மகத் தேரோட்டம், புரட்டாசி சனிக்கிழமை ஆகிய விழாக்கள், வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் இன்று துவங்கியது. மூலவர், உற்சவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான ஹிந்துக்கள் சனிக்கிழமை விரதம் இருப்பர். அவர்களுக்கு பிடித்தமான சனிக்கிழமையில், அரங்கநாதர் கோவிலுக்கு வந்து, பெருமாளை வழிபட்டு, தாசர்களுக்கு படையல் இட்டு, அவர்கள் கொடுக்கும் அரிசி, காய்கறிகளை வாங்கிச் சென்று, வீட்டில் பொங்கலிட்டு வழிபாடு செய்வர். புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா, வரும், 21ம் தேதி நடைபெற உள்ளது. 28ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை விழாவும், அக்டோபர் இரண்டாம் தேதி மஹாளய அமாவாசையும் நடைபெற உள்ளது. நாலாம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்குகிறது. தொடர்ந்து, ஐந்தாம் தேதி மூன்றாம் சனிக்கிழமை விழாவும், அக்டோபர், 12ம் தேதி நான்காம் சனிக்கிழமை விழாவும், சரஸ்வதி பூஜையும், 13ம் தேதி விஜயதசமியும், குதிரை வாகனத்தில் அரங்கநாதப் பெருமாள் எழுந்தருளி, அம்பு போடும் விழாவும், 19ம் தேதி புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமை விழாவும் நடக்க உள்ளன.