பதிவு செய்த நாள்
18
செப்
2024
05:09
மேட்டுப்பாளையம்; பிரதமர் மோடியின்,74 வது பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய இணை அமைச்சர் முருகன், விநாயகர் கோவிலில், பிரதமரின் பெயருக்கு அர்ச்சனை செய்து, மகிழம் மர நாற்றை நட்டார்.
மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில், வி.ஐ.பி., நகரில், மத்திய இணை அமைச்சர் முருகனின் முகாம் அலுவலகம் உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தில் ஐஸ்வர்யா கணபதி விநாயகர் கோவில் உள்ளது. பிரதமர் மோடியின், 74ம் பிறந்த நாளை முன்னிட்டு, விநாயகர் கோவிலில், பிரதமர் பெயரில் அர்ச்சனை செய்ய, கோவில் அர்ச்சகரிடம், மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார். இதை அறிந்த வி.ஐ.பி., நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சர் முருகன் கோவிலுக்கு வந்த போதும், குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விநாயகர் கோவிலில், பிரதமர் மோடியின் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. பின்பு கோவில் வளாகத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் மகிழம் மர நாற்றை நட்டார். குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடமும், மக்களிடமும் அமைச்சர் நலம் விசாரித்தார். இந்த சிறப்பு பூஜையில், கோவை வடக்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் சங்கீதா, மாவட்ட துணைத் தலைவர்கள் கலைவாணி, விக்னேஷ், குடியிருப்போர் நல சங்க நிர்வாகி ராஜேந்திரன் மற்றும் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.