பதிவு செய்த நாள்
07
அக்
2024
11:10
கோவை; ‘‘கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர். இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறார். வழிபடும் முறைதான் வேறு. அனைவரும் ஒரே சக்தியைதான் வழிபடுகிறோம்,’’ என்கிறார் மதநல்லிணக்க கொலு வைத்திருக்கும் நம் வாசகர் விஜயலட்சுமி ரமேஷ்குமார். தினமலர் மற்றும் அதிசியா நிறுவனம் சார்பில், நவராத்திரி பொம்மை கொலு விசிட், ராமநாதபுரம் மற்றும் சிங்காநல்லுார் பகுதிகளில் நடந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ராமாயணம், மகாபாரதம் மற்றும் ஆன்மிக வாழ்க்கை நெறிமுறைகளை பிரதிபலிக்கும் கருத்துள்ள பொம்மைகள், கடவுள் சிலைகள் ஏராளம் இருந்தன. இதில் 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் பழமையான கொலு பொம்மைகளும், இடம் பெற்றிருந்ததுதான் சிறப்பு.
அனைத்து கடவுளர் கொலு; நீலிக்கோணம்பாளையத்தை சேர்ந்த வாசகியர் ஆர்த்தி ராஜேஷ், தாட்சிமிதா, சித்ரா மூர்த்தி, மசக்காளிபாளையம் பகுதியில் வசிக்கும் வாசகி மஞ்சுளா கைலாஷ், சிங்காநல்லுார் வாசகியர் ரமா சுப்பிரமணியம், மகாலட்சுமி, கோத்தாரி நகரில் வசிக்கும் வாசகி ஷோபனா உள்ளிட்ட பலர், ஆன்மிக மரபை வெளிப்படுத்தும் கொலு பொம்மைகளை வைத்து அசத்தி இருந்தனர். மீனா எஸ்டேட் பகுதியில் வசிக்கும், வாசகி விஜயலட்சுமி ரமேஷ்குமார், அனைத்து மத கடவுள் உருவ பொம்மைகளையும் கொலுவில் வைத்து, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் சமத்துவ கொலு வைத்து, அனைவரிடமும் பாராட்டு பெற்று வருகிறார். அவர் கூறுகையில், ‘‘கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர். இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறார். நாம் வழிபடும் முறை வேறாக இருக்கலாம், ஆனால் அனைவரும் ஒரே சக்தியைதான் வழிபடுகிறோம்,’’ என்றார். இன்று பீளமேடு மற்றும் விளாங்குறிச்சி பகுதிகளில், தினமலர் குழுவினர் கொலு விசிட் வருகிறார்கள்.