பதிவு செய்த நாள்
14
அக்
2024
12:10
பட்டிவீரன்பட்டி; பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சின்ன அய்யம்பாளையம், பெரிய அய்யம்பாளையம் ஆகிய 5 ஊர்களில் முத்தாலம்மன் கோயில் புரட்டாசி திருவிழா 3 நாட்கள் நடந்தது. 15 நாட்களுக்கு முன்பு சுவாமி சாட்டுதலும் காப்பு கட்டுதல் நடந்தது. அக். 9ல் எல்லை காவல்காரசுவாமி பூஜைக்கு பின்பு சிம்ம வாகனத்தில் முத்தாலம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு கண் திறப்பு, தங்க ஆபரண அலங்காரம் செய்யப்பட்டது. அக்.10ல் அம்மனுக்கு மா விளக்கு, பொங்கல், அக்னிசட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் நடந்தன. நேற்று மேளதாளம், வானவேடிக்கையுடன் முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மஞ்சள் நீராடி பூஞ்சோலை சென்றடைந்தார். விழாவினை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறுதல், உறி அடித்தல், பெண்கள் பாட்டுபாடி கும்மி அடித்தல் போன்ற பாரம்பரியமான விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம் நடந்தன. ஏற்பாடுகளை அந்தந்த ஊர்களில் உள்ள விழா குழுவினர் பொதுமக்கள் செய்திருந்தனர்.