பதிவு செய்த நாள்
01
நவ
2024
09:11
தீபாவளிக்கு மறுதினம் சுமங்கலிப் பெண்களே கேதார கவுரிவிரதம் அனுஷ்டிப்பது வழக்கம். மகாகவுரியான அம்பிகை சிவ பெருமானின் முழு அருளையும் அன்பையும் பெற 21 நாட்கள் விரதம் மேற்கொண்டாள். அதுவே கேதாரீஸ்வரர் விரதம் அல்லது கேதார கவுரி விரதம் என்று போற்றப்படுகிறது. அதன் பயனாக ஈசன் உடலில் சரிபாதியைப் பெற்றாள் அம்பிகை. இந்த விரதத்தை பெண்கள் மேற்கொண்டால் கணவனின் முழு அன்பைப் பெறுவதுடன், பதினாறு பேறுகளையும் பெற்று வாழலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
சிவனுடன் கைலாயத்தில் பார்வதி அமர்ந்திருந்தபோது, பிருந்தி முனிவர் வந்தார். சிவனை மட்டுமே வணங்குவேன்; பார்வதியை வணங்க மாட்டேன் என்றார் அவர். பிருந்தி முனிவர், சிறு வண்டாக மாறி, இருவரின் நடுவில் சென்று, சிவனை மட்டும் சுற்றி வந்து வணங்கினார். இதனால் பார்வதி கோபம் அடைந்தார். ‘சக்தி இன்றி, சிவன் இல்லை’ என்பதை முனிவர் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்று பார்வதி கேட்டார். அதற்கு சிவன், அதை புரிந்து கொள்ளும் காலம் வரும் என்று புன்னகைத்தார்.
பார்வதி விருப்பம்; ஆனாலும் மனது கேளாத பார்வதி, கவுதம முனிவரை பார்த்து, ‘பிருந்தி முனிவர், என்னை விடுத்து, சிவனை மட்டும் வழிபட்டு செல்கிறார்’ என்றார். அதற்கு கவுதம முனிவர், ‘கேதாரத்தில் சிவன் லிங்கத்தை வைத்து பூஜை செய்தால், உங்களுக்கு 21வது நாள் பலன் கிடைக்கும்’ என்றார். இதையடுத்து, புரட்டாசி சுக்ல பட்சம் தசமி அன்று, பார்வதி தேவி பூஜை செய்ய துவங்கி, அன்ன ஆகாரம் இன்றி, 21 நாட்கள் விரதம் இருந்தார். தீபாவளியன்று விரதம் நிறைவுற்றது. இதனால் மகிழ்ந்த ஈஸ்வரர், ‘என்ன வரம் வேண்டும்... கேள்’ என்றார். அதற்கு பார்வதி, ‘நம் இருவர் இடையே, வண்டு ரூபத்தில் வந்து, உங்களை மட்டும் வணங்கி சென்றவருக்கு புத்தி புகட்ட வேண்டும். உங்கள் உடலில் பாதி தர வேண்டும்’ என்றார்.
சவுபாக்கியம்; ஆணும், பெண்ணும் சமமாக பார்க்க வேண்டும் என்பதற்காகவும், ‘சக்தி இன்றி சிவன் இல்லை என்பதை புரிய வைப்பதற்காகவும், கேதார கவுரி விரதம் கடைப்பிடிப்பதை சிவபெருமான் உணர்த்தினார். கேதாரீஸ்வரியை வணங்குவதால், நமக்கு சகல சவுபாக்கியமும் கிடைக்கும். இதனாலேயே கேதார கவுரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. சிவபெருமான் – பார்வதியின் முழு கருணையையும் பெறலாம். இந்த விரதத்தை சதுர்த்தசி திதியிலும் அல்லது அமாவாசை திதியிலும் நிறைவு செய்வது வழக்கம்.