பதிவு செய்த நாள்
01
நவ
2024
09:11
லக்னோ; ‘‘நம் நாட்டின் பலம் சனாதன தர்மத்துடன் பின்னி பிணைந்துள்ளது; அது மட்டுமின்றி ஜாதி, நம்பிக்கை, மொழி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையை வலியுறுத்துகிறது,’’ என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உ.பி., மாநிலம் அயோத்தியில் தீபோற்சவ விழாவை ஒட்டி நேற்று முன்தினம் சரயு ஆற்றங்கரையில் உள்ள 55 படித்துறைகளில் 25 லட்சம் மண் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதில் பங்கேற்ற அந்த மாநில முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத், தீபாவளி திருநாளான நேற்று அயோத்தி ராமர் கோவிலில் பால ராமரை தரிசித்தார். பின், அங்குள்ள ஹனுமன் கார்ஹி கோவிலுக்கும் சென்று அவர் வழிபட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரலாற்று சிறப்புமிக்கது. கடந்த 500 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்கு பின், ராமர் தன் இல்லத்தில் அமர்ந்துள்ளார். அவர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட புதிய கோவில் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் ஏராளமான விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. ஒளிரும் ஒவ்வொரு விளக்கு வாயிலாக அறிவு, நம்பிக்கை மற்றும் கல்வியின் ஒளியை பரப்புவதற்கான செய்தியை இந்த விழா வழங்குகிறது. அயோத்தியில் தீபாவளி கொண்டாடும் பழமையான மற்றும் புகழ்பெற்ற பாரம்பரியத்தை, ‘தீபோற்சவ’ சேவை வாயிலாக மாநில அரசு நிறைவேற்றி வருகிறது.
அயோத்தியின் பெருமையை ஒட்டுமொத்த உலகத்துக்கும் அறிமுகப்படுத்தும் பணியை மாநில அரசு செய்து வருகிறது. ராமருக்கு கோவில் எழுப்பப்பட்டதன் வாயிலாக அயோத்தி மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த பாரம்பரியத்தை நாம் அனைவரும் நிலைநிறுத்த வேண்டும். அதேசமயம், இது மனநிறைவுக்கான நேரமல்ல. ஜாதி, நம்பிக்கை, மொழி மற்றும் மதத்துக்கு அப்பாற்பட்டு நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். பிரிவினை நம்மை பலவீனப்படுத்தும். நம் நாட்டின் நெறிமுறைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் இதன் வாயிலாக முறியடிக்ப்படும். நம் நாட்டின் பலம் சனாதன தர்மத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. நமது உண்மையான அடையாளம் வெறும் வார்த்தைகளில் அல்ல, சேவைக்கான நமது அர்ப்பணிப்பில் உள்ளது. இந்த விழா மக்களுக்கும், சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களுக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரும். இவ்வாறு அவர் கூறினார்.