பதிவு செய்த நாள்
07
நவ
2024
10:11
ஆறும் ஆறுமுகனும்; முருகனுக்கும் எண் ஆறுக்கும் தொடர்பு அதிகம். முகங்கள் ஆறு. இவரை வளர்த்தவர்கள் கார்த்திகைப்பெண்கள் ஆறு. ஆறெழுத்து மந்திரத்திற்கு உரியவர். ஆறுபடை வீடுகளுக்கு சொந்தக்காரர். ஆறாம் திதியான சஷ்டியில், சூரசம்ஹாரம் செய்தவர் என ஆறுக்கு நெருக்கமானவர். பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் என்னும் நுாலில், ‘ஓம் சஷ்டி பதயே நமோ நம:’ என உள்ளது. சஷ்டி தேவியின் தலைவனாக விளங்கும் முருகப்பெருமானுக்கு வணக்கம் என பொருள்.
முருகா... முருகா...; முருகா... என அழைத்தாலே போதும் மும்மூர்த்திகளும் ஓடி வருவார்கள். மு என்றால் முகுந்தன்(பெருமாள்), ரு என்றால் ருத்ரன்(சிவன்), க என்றால் கமலன்(பிரம்மா) என மூவரது பெயரும் இதில் அடங்கியுள்ளது. ‘முருகா’ என்ற பெயருக்கு தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்னும் ஆறு பொருள்கள் உள்ளன. முருகன், குமரன், குகன், ஆகிய மூன்று பெயர்களும் சிறப்பானவை. இதனை அருணகிரிநாதர், ‘‘முருகன், குமரன், குகன், என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்’’ என்று கந்தரநுபூதி பாடலில் குறிப்பிட்டுள்ளார். விரதம் இருப்பவர்கள் மந்திரம், ஸ்லோகங்கள் சொல்ல முடியவில்லை என்றாலும் ‘முருகா’ என்ற நாமத்தை ஜபித்தால் போதும்.
குரு தலம்; அசுரர்களின் வரலாறை திருச்செந்துாரில் முருகனுக்கு கூறியவர் குருபகவான். எனவே இத்தலம் குரு தலம் எனப்படுகிறது. இங்கு வழிபட்டால் வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேறு தடையின்றி கிடைக்கும்.
கூர்மம், அஷ்ட நாகங்கள், அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது மேதா தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தியபடி இங்கிருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும் கிளி வடிவில் அமர்ந்துள்ளன. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருள்வதால் இவரை ‘ஞானஸ்கந்த மூர்த்தி’ என்பர்.
கந்தமாதன பர்வதம்: ஆறுபடைவீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக்கோயிலாகவும் உள்ளன. ஆனால் திருச்செந்துாரும் மலைக்கோயிலே. கடற்கரையில் இருக்கும் ‘சந்தனமலை’யில் தான் கோயில் இருந்தது. எனவே இத்தலத்தை, ‘கந்தமாதன பர்வதம்’ என்பர். தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறுகுன்றாக இருப்பதைக் காணலாம்.
முருகன் அவதாரம்; * சூரபத்மன் வதம் மட்டுமின்றி கந்தசஷ்டிக்கு வேறு சில காரணங்களும் மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருசமயம் முனிவர்கள் சிலர் உலக நன்மைக்காக யாகம் ஒன்றை நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை தொடங்கி ஆறு நாள் நடத்தினர். யாகத்தீயில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதம் ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை ஒன்றாக்கிட முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என்கிறது மகாபாரதம்.
* தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து விரதமிருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்புரிந்தார். இதனை நினைவவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்த கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறது கந்தபுராணம்.
திருப்புகழ் ; முருகனின் சிறப்புகளையும், அவரது அருள் வேண்டியும் அருணகிரிநாதர் பாடிய பாடல்களின் தொகுப்பே திருப்புகழ், இதன் முதல் அடியான ’முத்தைத்தரு’ என்பதை முருகனே எடுத்துக் கொடுத்தார். ‘திரு’ என்றால் ‘அழகு, ஐஸ்வர்யம்’. அழகனாகிய, ஐஸ்வர்யம் தருகின்ற முருகனை புகழும் பாடல்களைக் கொண்டதால், ‘திருப்புகழ்’ என்று பெயர் ஏற்பட்டது.
எதிரிகள் இனியில்லை: அம்பாள் கோயில்களில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அதுபோல செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகிலுள்ள பெரும்பேர்கண்டிகை சுப்பிரமணிய சுவாமி கோயில் கருவறையின் முன்புறம் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்தலத்து முருகன் புன்னகை தவழ ஓராறு முகமும் ஈராறு கரமும் கொண்டவராய் உள்ளார். தெற்கு நோக்கி வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்ரமணியனாக காட்சி தருகிறார். அவருக்கு துணையாக அருகே காசி விஸ்வநாதரும், விசாலாட்சியும் உள்ளனர். வஜ்ரம், அம்பு, வாள், வில் ஏந்தி முருகன் போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். போர்க்கோலம் என்றாலும் அவரது முகத்தில் சாந்த குணமே தென்படுகிறது. என்னதான் இருந்தாலும் முருகன் ஒரு கள்ளம் கபடம் இல்லாத குழந்தைதானே. அவரது திருவடியை கண்டால் உள்ளமும் உருகிவிடும். அவரது திருவுருவத்துக்கு முன்பாகத்தான் சத்ரு சம்ஹார யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் செல்பவனும் முருகன். சர்வ நன்மைகள் செய்பவனும் முருகன். அவரை ஒருமுறை வலம் வந்து வணங்குங்கள். அந்த நொடியே எதிரிகள் பொடி பொடியாவார்கள்.
பெரும் பெயர் முருகன் : கந்தன், வேலன், சுப்பிரமண்யர் என முருகனுக்கு பல பெயர்கள் இருந்தாலும் சங்க இலக்கியத்தில் முருகன் என்ற பெயர் மட்டுமே உள்ளது.
* அரும்பெறல் மரபின் பெரும் பெயர் முருக – திருமுருகாற்றுப்படை
* முருகன் சீற்றத்து உருகெழு குரிசில் – பொருநராற்றுப்படை
* முருகென மொழியும் வேலன் – ஐங்குறுநுாறு
* பெரும் பெயர் முருக – பரிபாடல்
* முருகன் ஆரணங் கென்றலின் – அகநானுாறு
* சூர்நவை முருகன் சுற்றத் தன்னநின் – புறநானுாறு