பதிவு செய்த நாள்
07
நவ
2024
10:11
ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில்,சூரனையும் ஆட்கொண்டு பெருவாழ்வு தந்தருள்கிறார். எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு இதுவாகும். அதனால் தான் வைதாரையும் வாழவைப்பவன் முருகன் என்று போற்றி வழிபடுவர்.
கந்தசஷ்டியின் ஆறாம் நாளான இன்று நம் மனதில் இருக்கும் ஆணவத்தையும், அசுர எண்ணங்களையும் விடுத்து, நல்ல எண்ணம் என்னும் மயிலாக மாறி ஆறுமுகப்பெருமானைத் தாங்கி மகிழ்வோம். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம் இவ்விழாவிற்கு வேறு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணம் கூறுகிறது. முனிவர்கள், ஒரு ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று வேள்வி வளர்த்து யாகம் துவங்கினர். ஆறு நாட்கள் நடந்த அந்த யாககுண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொருநாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்கள் ஆறாம் நாளில் ஒன்றாக சேர்ந்து முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாள் கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது. கந்தபுராணத்தில் கச்சியப்பசிவாச்சாரியார், தேவர்கள் ஐப்பசி மாத வளர்பிறையில் முதல் ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, அசுரர்களை வதம் செய்வதற்காகவும், அவரது அருள் வேண்டியும் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார். 12 நாள் விழா முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவை 12 நாட்கள் கொண்டாடுகின்றனர். முதல் ஆறுநாட்களில் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன்- தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை ஆகியன நடக்கும். இன்று முருகனை வழிபட்டால் வாழ்வில் எதிலும் வெற்றி எங்கும் வெற்றிதான்.