பதிவு செய்த நாள்
07
நவ
2024
11:11
ப.வேலுார்; ப.வேலுார் காவிரி ஆற்றில், அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு சங்கம் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு சங்கத்தினர், காவிரி நதியை துாய்மையாக வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, 14 ஆண்டுகளாக துலா தீர்த்த ரத யாத்திரையை நடத்தி வருகின்றனர். அதன்படி, அகில பாரத சன்னியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்த மகராஜ் தலைமையில், அக்., 20ல் கர்நாடகா மாநிலம், குடகுமலை, தலை காவிரியில் இருந்து புறப்பட்டு, கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும், தமிழகத்தில் ஓசூர், ஒகேனக்கல், பவானி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, நேற்று நாமக்கல் மாவட்டம், ப.வேலுார், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில், காவிரி தாய்க்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மேலும், காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக, காவிரி ஆற்றில் பூக்களை துாவி வழிபட்டனர். இதில், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தினர் பங்கேற்றனர். இந்த ரத யாத்திரை, வரும், 13ல் பூம்புகாரில் உள்ள காவிரி சங்கமிக்கும் இடத்தில், சிறப்பு வழிபாட்டுடன் நிறைவடைகிறது.