பதிவு செய்த நாள்
07
நவ
2024
01:11
கம்பம்; சபரிமலையில் தரிசனத்திற்கென ஸ்பாட் புக்கிங் மூலம் செல்பவர்கள், தங்கள் தரிசனத்தை 12 மணி நேரத்திற்குள் முடித்து திரும்ப வேண்டும் என்று தேவசம்போர்டு நிபந்தனை விதித்துள்ளது.
தென் மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சபரிமலை ஐயப்பன் கோயில் முதலிடம் பெறுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் 5 நாட்கள் தரிசனத்திற்கென நடை திறந்த போதும், ஆண்டுதோறும் கார்த்திகை தை மாதங்களில் நடைபெறும் மகர விளக்கு மண்டல பூஜை நிகழ்ச்சிகளில் பங்கேற்க லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். கடந்த 2019 கொரோனோ பெருந் தொற்றுக்கு பின் ஆன்லைனில் பதிவு பண்ணி தரிசனம் பண்ணும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு ஸ்பாட் புக்கிங் அமல்படுத்த வலியுறுத்தி கேரளாவில் பா.ஜ. மற்றும் ஹிந்து இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தது. அதன் பின் கேரள அரசு ஆன்லைன் மூலம் தினமும் 70 ஆயிரம், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பம்பை, எருமேலி , சத்திரம் ஆகிய மூன்று இடங்களில் ஸ்பாட் புக்கிங் நடைபெறுகிறது. ஆதார் கட்டாயம் என்றும், ஆதார் இல்லையென்றால் மாற்று ஆவணங்களாக வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் பாஸ்போர்ட் ஏற்றுக்கொள்ளப் படும் என்றும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. ஸ்பாட் புக்கிங் மூலம் தரிசனம் செய்ய செல்பவர்கள், தங்கள் தரிசனத்தை 12 மணி நேரத்திற்குள் முடித்து விட்டு திரும்பவும் நிபந்தனை விதித்துள்ளது.