பதிவு செய்த நாள்
14
நவ
2024
04:11
போடி; தென் திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இன்று புதிதாக கொடிமரம் நடும் விழா நடந்தது.
போடி பரமசிவன் கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 18 ஆண்டுகள் ஆகிறது. இதற்கான கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி இந்து அறநிலையத்துறை, நன் கொடையாளர்கள், ஊர் பொதுமக்கள் மூலம் கோயில் புனரமைப்பு, புதிய சிலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை ஒட்டி புதிதாக உருவாக்கப்பட்ட கொடி மரத்தை நேற்று போடி பெரியாண்டவர் கோயிலில் இருந்து காமராஜர் பஜார், கட்டபொம்மன் சிலை, முந்தல் ரோடு வழியாக போடி பரமசிவன் மலைக் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அங்கு புதிய கொடிமரம் நடும் விழா பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் அன்னக்கொடி, தேனி பிரிவு ஆய்வாளர் தியாகராஜன், செயல் அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர். கொடிமரம் நடும் விழாவை ஒட்டி சிவனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. அன்னதான அறக்கட்டளை செயலாளர் பேச்சிமுத்து, நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சேதுராம், தொழிலதிபர்கள் பரமசிவம், நாகமணி, போடி சுப்பிரமணியர் கோயில் கந்த சஷ்டி திருக்கல்யாணம் அறக்கட்டளை, போடி பரமசிவன் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.