பதிவு செய்த நாள்
23
நவ
2024
09:11
சபரிமலை: பம்பையில் 300 ரூபாய் கட்டணத்தில் 24 மணி நேரமும் இருமுடி கட்டுவதற்காக பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
300 ரூபாய் கட்டணம்; இருமுடி கட்டு எடுத்து வர முடியாத பக்தர்களின் வசதிக்காக பம்பை கணபதி கோயிலின் பின் இருமுடி கட்டுவதற்கு தேவசம்போர்டு வசதி செய்துள்ளது. இதற்காக தேவசம்போர்டு நிர்ணயித்துள்ள 300 ரூபாய் கட்டணத்தை செலுத்தி ரசீதுடன் சென்றால் அங்கு இருக்கும் பூஜாரி இருமுடி கட்டு கட்டி பக்தரின் தலையில் ஏற்றி விடுவார். இங்கு கட்டப்படும் இருமுடியில் பாலித்தீன் பயன்பாடு இருக்காது. 300 ரூபாய் கட்டணத்தில் ஒரு நெய் தேங்காய் மட்டும் தரப்படும். கூடுதல் நெய் தேங்காய்க்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் பம்பையில் வந்து ஸ்பாட் புக்கிங் செய்து, இருமுடி கட்டிக்கொள்ளலாம்.
குடிநீர்: பக்தர்களின் வசதிக்காக பம்பை முதல் சன்னிதானம் வரை சபரி தீர்த்தம் என்ற பெயரில் 106 குடிநீர் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதற்காக 35 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இந்த குழாய்களில் தண்ணீர் பக்தர்களுக்கு கிடைக்கும்.
3000 விளக்குகள்; சன்னிதானம், பம்பை, நிலக்கல் போன்ற இடங்களில் 3000 விளக்குகளை கேரள மின் வாரியம் அமைத் துள்ளது. இதில் எல்.இ.டி. லைட்டுகளும் அடங்கும்.
மீட்பு; நேற்று முன்தினம் இரவு புல்மேடு பாதையில் சன்னிதானத்துக்கு வந்து கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த வருண் 20, கோடீஸ்வரன் 40, லட்சுமணன் 50,ஆகியோர் கழுதைக்குழி என்ற இடத்தில் கால் வலியால் சிக்கிக்கொண்டனர். தீயணைப்பு துறை மற்றும் தேசிய பேரிடர் நிவாரண படையினர் சென்று அவர்களை ஸ்டிரெச்சரில் மீட்டு வந்தனர்.