பதிவு செய்த நாள்
23
நவ
2024
02:11
சபரிமலை; சபரிமலை தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்தும் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் தங்கள் பதிவை ரத்து செய்யாத பட்சத்தில் அவர்களது ஐ.டி. பிளாக் செய்யப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் பத்தாயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களில் 10 முதல் 15 ஆயிரம் பேர் தினமும்தரிசனத்திற்கு வராத நிலை காணப்படுகிறது. இது குறித்து கேரள உயர்நீதிமன்றம் நியமித்துள்ள தனி அதிகாரி கொடுத்த அறிக்கை மீது நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், எஸ். முரளி கிருஷ்ணா ஆகியோர் விசாரணை நடத்தினர். முன்பதிவு செய்தவர்களில் 20 முதல் 25 சதவீதம் வரை தரிசனத்திற்கு வரவில்லை, இதனால் பிற பக்தர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க இயலவில்லை என்று தேவசம்போர்டு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.பிஜு தெரிவித்தார். தரிசனத்திற்கு வரவில்லை என்றால் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டும் பக்தர்கள் அதை ரத்து செய்யாத நிலை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இதனால் முன்பதிவு செய்து வராத பக்தர்கள் பயன்படுத்திய ஐ.டி.யை சஸ்பெண்ட் செய்வதாகவும் அவர் கூறினார்.
பின்னர் இதன் மீது உத்தரவு பிரித்த பிறப்பித்த நீதிபதிகள்; முன்பதிவு செய்தும் சபரிமலைக்கு வர முடியாதவர்கள் தங்கள் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேவசம்போர்டுக்கு உத்தரவிட்டனர், எனினும் முன்பதிவு எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக நீதிபதிகள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
சபரிமலை தொடர்பாக பிற விஷயங்களில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வெளிமாநிலங்களில் வரும் வாகனங்களில் எல்.இ.டி. லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ஐயப்பா சேவா சங்கத்தின் கைவசம் இருந்த கட்டிடங்களின் தற்போதைய நிலை பற்றி சபரிமலை தனி அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சபரிமலை தங்குமிடங்களில் ஒன்றான வைக்கம் மகாதேவர் கோயில் பார்க்கிங் கிரவுண்டில் கழிவறை வசதி செய்வதை தேவசம்போர்டு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.