பதிவு செய்த நாள்
26
நவ
2024
01:11
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ள கல்யாணி யானையை, ஆய்வு செய்த வளர்ப்பு யானைகள் கண்காணிப்பு குழுவினர், யானை நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஹிந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கல்யாணி, 33 என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையின் உடல் நலம் குறித்து, மாவட்ட வன அலுவலர் தலைமையிலான வளர்ப்பு யானை கண்காணிப்பு குழுவினர், 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, வணக்கம் கால்நடை டாக்டர் சுகுமார், கால்நடை டாக்டர் சாந்தி, கோவை வனச்சரகர் திருமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதுகுறித்து வனக்கால்நடை டாக்டர் சுகுமார் கூறுகையில்,‘கல்யாணி யானை ஆரோக்கியமாக உள்ளது. யானை குளிக்கும் இடத்தை சுற்றியுள்ள இடங்களில் புதர் நிறைந்துள்ளது. அதனை அகற்ற வேண்டும். அருகில் உள்ள கோசாலையின் மதில் சுவரை உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்,‘என்றார்.