சபரிமலை; சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்காக 540 அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன.
சபரிமலையில் அதிகாலை 3:30 முதல் காலை 11:30 வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடக்கிறது. இதனால் மதியத்துக்கு பின்னர் வரும் பக்தர்கள் திரும்பிச் செல்லாமல் நெய்யபிஷேகம் நடத்துவதற்காக அன்றைய தினம் சன்னிதானத்தில் தங்குகின்றனர். இதற்காக விரி என்று அழைக்கப்படும் பொது ஷெட்டுகள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது. இலவசமாக தங்குவதற்கு மாகுண்டா நிலையம், சன்னிதானம் மாளிகைபுறம் நடைப்பந்தல்கள் உள்ளன. இதனுடன் தேவசம்போர்டுக்கு சொந்தமான கட்டடங்களில் 540 அறைகள் உள்ளன.
இந்த அறைகளுக்கு onlinetdb.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். தங்க நினைக்கும் நாளிலிருந்து 15 நாட்களுக்கு முன்னதாக அறைகளை முன் பதிவு செய்ய முடியும். ஆன்லைன் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் சன்னிதானம் அருகே பி.எஸ்.என்.எல்., செல்லும் படிக்கட்டில் அமைந்துள்ள அக்காமடேஷன் அலுவலகத்தில் ஆதார் கார்டு கொடுத்து அந்தந்த தினங்களுக்கு அறைகள் பெற முடியும். 12 மற்றும் 16 மணி நேரத்துக்கு அறைகள் ஒதுக்கப்படுகின்றன. இருவர் தங்கும் அறைக்கு 12 மணி நேரத்துக்கு ரூ.250 முதல் 1600 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் பக்தர்கள் வந்தால் அதற்கு ஏற்ப கட்டணமும் அதிகரிக்கும்.