பதிவு செய்த நாள்
02
டிச
2024
10:12
சபரிமலை; தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக, சபரிமலையில் அதன் தாக்கம் இருக்கும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து, பம்பையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. எதிர்பார்த்தபடி, நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு துவங்கிய சாரல் மழை, இரவு வலுத்தது. நேற்று காலை சாரல் மழை தொடர்ந்த நிலையில், 11:00 மணிக்கு பின் கனமழை தொடங்கியது.
இதனால் மலையேறும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பக்தர்கள் அருகிலிருந்த கடைகளில் தஞ்சமடைந்தனர். மழையால் பாதையில் சறுக்கல் ஏற்பட்டதால், பக்தர்கள் மெதுவாகவே ஏற முடிந்தது. பெரிய நடைப்பந்தலில் நேற்று கியூ காணப்படவில்லை. பக்தர்கள் உடனடியாக தரிசனம் முடித்து ஷெட்டுகளில் தஞ்சமடைந்தனர். ஏராளமான பக்தர்கள் மழையில் நனையாமல் இருக்க பாலிதீன் கோட் அணிந்து வந்தனர். சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டை மாவட்டத்திற்கு நேற்று மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது. சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல்லில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், 40 கி.மீ., வேகத்தில் காற்று வீச கூடும் என்றும், 11.55 செ.மீ. வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று மதியத்துக்கு பின் மழை மேலும் வலுத்தது. புயல் காரணமாக தமிழக பக்தர்கள் கணிசமாக குறைந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் மழை தீர்ந்த பின் மற்ற நாட்களில் வரக்கூடும் என்பதால் அப்போது நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேவசம் போர்டு கருதுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர், பி.எஸ்.பிரசாந்த் கூறினார். இதற்கிடையே, சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் போது, கையில் கம்பு எடுக்கக் கூடாது என, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என, வழிகாட்டு நெறிமுறைகளை உயர் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அதன் விவரம்:
பணி நேரத்தில் மொபைல் போனில் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது. இது கேமராவில் கண்காணிக்கப்படும்
பக்தர்களை, சுவாமி என்று மட்டுமே அழைக்க வேண்டும். பக்தர்கள் உணர்ச்சி வசப்பட்டோ அல்லது ஆத்திரத்திலோ எவ்வித செயல்பாட்டில் ஈடுபட்டாலும் போலீசார் பொறுமையை இழக்கக்கூடாது
பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்தும் போது பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் போலீசார் விசில் பயன்படுத்தலாம். காக்கி பேன்ட், சட்டை அணிந்து வருபவர்களை பரிசோதனை இன்றி செல்ல அனுமதிக்கக் கூடாது
பெருவழிப்பாதை போன்ற காட்டுப்பாதையில் வரும் பக்தர்கள் காட்டு விலங்குகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க, நாட்டு வெடிகளை கையில் வைத்திருப்பது கடந்த காலங்களில் வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில் தெரிய வந்துள்ளது. நாட்டு வெடிகுண்டுகளுடன் பக்தர்கள், சன்னிதானத்திற்கு வராமல் இருக்க பரிசோதனையில் கவனம் செலுத்த வேண்டும்
நிலைமைக்கு ஏற்ற செயல்பாடு போலீசாருக்கு மிகவும் முக்கியம். கூட்டம் அதிகமாகி, நெரிசல் ஏற்பட்டாலும் அதை ஒழுங்குபடுத்துவதற்கு போலீசார் கையில் கம்பு எடுக்கக் கூடாது. இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பூக்களில் தயாராகிறது ஊதுபத்தி; சபரிமலையில் தினமும் ஆயிரக்கணக்கான பூக்கள் சேகரமாகின்றன. பூஜைக்கு பின் சேரும் பூக்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எரிக்கும் பணி நடக்கிறது. இப்பணியில் சிரமம் உள்ளதால் சேரும் பூக்களை மறு சுழற்சியில், வேறு ஏதாவது பயனுள்ள பொருட்கள் தயாரிக்க வழி உள்ளதா என, ஆய்வுகள் நடந்தன. இதையறிந்து பூக்களை மறு சுழற்சி செய்து ஊது பத்திகளாக தயாரிக்க கான்பூர் நிறுவனம், கேரள அரசிடம் விண்ணப்பித்துள்ளது. கேரள அரசும், தேவசம் போர்டும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. நிலக்கல், சன்னிதானத்தில் இடம் ஒதுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கு வனத்துறை அனுமதியளிக்காது என்பதால் தற்காலிக ‘ஷெட்’ அமைத்துக் கொள்ள அனுமதி வழங்க வாய்ப்புகள் உள்ளன. விரைவில் இப்பணிகள் துவங்கவுள்ளன.