மேட்டுப்பாளையம்; கார்த்திகை மாதம் 3வது சோமவாரம் திங்கட்கிழமையை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சங்காபிஷேகம் நடந்தது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. கோவிலில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. கார்த்திகை மாதம் 3வது சோமவாரம் திங்கட்கிழமையை முன்னிட்டு வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக திருவிளக்கு வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, அதனை தொடர்ந்து 54 திரவியங்களால் வேள்வி நடந்தது. இந்த வேள்வியில் கணபதி வழிபாடு, முருக வழிபாடு, சிவ வழிபாடு, உள்ளிட்டவைகள் நடந்தன். தொடர்ந்து 108 சங்குகள் வாயிலாக சிவ லிங்க வடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜிக்கப்பட்ட சங்கு தீர்த்தங்கள், திருக்கோவில் சுற்றி வந்து வெள்ளிங்கிரி ஆண்டவர் மற்றும் மனோன்மணி தாயாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தலைமை அர்ச்சகர் ஜோதி வேலவன் தலைமையில் விஜய் வேலவன், சங்கரேஸ்வரர் ஆகியோர் பூஜைகளை மேற்கொண்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.