பதிவு செய்த நாள்
04
டிச
2024
11:12
சென்னை: சென்னை, ராஜகீழ்ப்பாக்கத்தில் ஸ்ரீகாஞ்சி மஹா சுவாமி வித்யாலயா அமைந்துள்ளது. அப்பள்ளியின் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாமகோடி பீடத்தின், 69வது பீடாதிபதியான ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு, ஆன்மிக சாதனைகள் ஆகியவற்றை விளக்கும் நிரந்தர கண்காட்சி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வரலாற்று பெருமை கொண்ட இந்திய குடியரசின் அரசியல் சட்டத்தின், 75 வது ஆண்டு நிறைவு நாள் பூங்கா, டாக்டர் அம்பேத்கர் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. விழாவிற்கு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தலைமையில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஸ்ரீராம், கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள எட்நீர் மடத்தின் மடாதிபதி சச்சிதானந்த பாரதி சுவாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இவ்விழாவில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று அருளாசி வழங்கியதாவது: ஸ்ரீமஹா சுவாமி வித்யாலயாவின் தலைவர் சங்கர் ஆன்மிகம், அறப் பணி உள்ளிட்ட பல்துறைகளில் சிறப்பாக சேவையாற்றி வருகிறார். தேசத்திற்காக பாடுபடுவோர்களை உலகறியச் செய்து, பொது நலம் காப்போரை ஊக்குவிக்க வேண்டும். தேசத்தின் பாதுகாப்பினை உறுதி செய்து, பரம்வீர் சக்ரம் வென்றோர்களுக்கு உரிய கவுரவம் அளிக்கப்படுகிறது. குடியரசாக தேசத்தின் அரசியல் சட்டம் இயற்றிய கொண்டாட்டங்களில் பங்களிப்பு அளித்து வருகிறோம். ஜயேந்திரரின் அரிய பணிகளை எல்லோர் நினைவிலும் நிலையாக நிற்கும் வகையிலும் கண்ணுக்கும் கருத்திற்கும் மகிழ்சி தரும், ஜயேந்திரம் கண்காட்சி ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சட்டத்தில் சமய நம்பிக்கைகள் காக்கப்படுவதை உறுதி செய்யும் கவசமாக, சட்டப் பிரிவுகளை ஶ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி ஏற்படுத்திக் கொடுத்தார். கேஸவானந்த பாரதி சுவாமிகள் வழக்கு ஒன்றில் வழிகாட்டியாய் இருந்து அடிப்படை உரிமைகள் பெற உதவினார். நம் அரசியல் சாஸனத்தின் சிறப்பே, விருப்பு வெறுப்பற்ற சம நிலை சட்டமாக இருப்பதுதான். எனவே சமயங்கள் பற்றிய விஷயத்தில் சமுதாயம், சமயம், சட்டம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைய வேண்டும். அரசியல் சட்டத்திலேயே பசுக்களை காப்பது குறித்து சொல்லப்பட்டுள்ளது, எனவே இந்த விஷயத்தில் கட்சிகளைக் கடந்து சிந்திக்க வேண்டும். இவ்வாறு அருளாசி வழங்கினார்.