அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் கார்த்திகை தீப உற்ஸவம் டிச. 14ல் நடக்கிறது. பவுர்ணமி தினமான அன்று காலையில் கள்ளழகருக்கு ஏகாந்த திருமஞ்சனம் செய்யப்பட்டு பெரிய தோளுக்கினியானில் எழுந்தருள்கிறார். பின் திருமடப்பள்ளி நாச்சியாருக்கு திருமஞ்சனம், தீபாராதனை செய்யப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு மேல் 6:45 மணிக்குள் பெருமாள், ேஷத்திரபாலகர், கருடன், தாயார், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், ஆண்டாள், சரஸ்வதி, கம்பத்தடி சன்னதிகளில் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. பிராமண சீர்பாதமாக தெற்கு படியேற்ற பிரகாரம் வழியாக பெருமாள் எழுந்தருளி, ஆழ்வார்கள் சன்னதியில் தீர்த்தம், சடாரி, கோஷ்டி நடந்து தீபத்துடன் குடவறை வழியாக உரியடி மண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார். பூஜைகள் முடிந்து அகல் தீபத்தை சொக்கப்பனையில் கொளுத்தி பெருமாள் தீப உற்ஸவம் நடைபெறும். அழகர்மலையின் உச்சியில் உள்ள வெள்ளிமலையாண்டி கோயில் கோம்பை கொப்பரையில் 300 லிட்டர் ஆவின் நெய் ஊற்றப்பட்டுமாலை 6:00 முதல் 6:45 மணிக்குள் மகா தீபம் ஏற்றப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.