திருச்சானூர் பிரம்மோற்சவம்; சூரியபிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2024 12:12
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை பிரம்மோற்சவத்தில் இன்று சூரியபிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் உலா வந்து அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயாரின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் 8வது நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட மகா ரதத்தில் ( தேரில் ) பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்திற்கு மத்தியில் வடம் பிடித்து இழுத்து செல்ல தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை சூரியபிரபை வாகனத்தில் கோவர்தன கிரி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் உலா வந்த அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதில் பக்தர்கள் கோலாட்டம், பஜனை உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தியபடியும், சுவாமியின் பல்வேறு அவதாரங்கள் போல் வேடமணிந்தும் பங்கேற்றனர்.
பத்மாவதி தாயார் பிறந்த நட்சத்திரமான கார்த்திகை மாத பஞ்சமி 11.45 மணியளவில் மகர லக்னத்தில் பஞ்சமி தீர்த்தத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. தீர்த்தவாரியையொட்டி பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்காக கோயிலைச்சுற்றி 160 இடங்களில் அன்னப்பிரசாத கவுன்டர்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் 188 இடங்களில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் குளத்தில் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் தனித்தனி வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்த பின் 48 மணி நேரத்திற்கு அந்த புனிதம் இருக்கும் என்பதால் பக்தர்கள் தள்ளுமுள்ளு இல்லாமல் பொறுமையாக காத்திருந்து புனித நீராடும்படி தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பஞ்சமி தீர்த்ததிற்கான ஏற்பாடுகள் குறித்து செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தலைமையில் அதிகாரிகள் பக்தர்களுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.