பதிவு செய்த நாள்
09
டிச
2024
11:12
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்று கிழமைகளில், வாரந்தோறும் பக்தர்கள் மாவிளக்கு பரிகாரம் செய்யும், கடை ஞாயிறு பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கார்த்திகை மாத நான்காவது வார கடை ஞாயிறு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதில், சிறுவர்கள், பெரியவர்கள் என, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்சட்டியில், பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து, அதில் அகல்விளக்கில் நெய்தீபம் ஏற்றி, தலையில் மாவிளக்கு சுமந்தபடி கூட்ட நெரிசலில் பக்தி பரவசத்துடன் கோவில் பிரகாரத்தில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள குளக்கரையில், தீயணைப்பு துறையினர் மீட்பு உபகரணங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல, கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசாரும், கோவிலின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.