பதிவு செய்த நாள்
09
டிச
2024
02:12
மறைமலைநகர்; சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில், மலையடிவாரத்தில் பழமையான மருதீஸ்வரர் – இருள் நீக்கி தாயார் கோவில் உள்ளது. சைவ குரவர்களில் ஒருவரான சுந்தரரால் பாடல்பெற்ற இக்கோவில், தற்போது ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், நான்காவது வார திங்கட்கிழமை சோம வாரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடைபெறும். பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கிரிவலம் வருவர். அதன்படி இன்று சோம வாரத்தை முன்னிட்டு சென்னை, மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை வலம் வந்து, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அவதி; கோவில் பிரகாரத்தின் உள்ளே தீபாராதனை வழக்கும் இடத்தில், இரண்டு ‘ஏசி’கள் மற்றும் மூன்று மின்விசிறிகள் உள்ளன. இதில் ‘ஏசி’கள் மற்றும் இரண்டு மின்விசிறிகள் பழுதடைந்து உள்ளதால், ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளே சென்றதால் முதியவர்கள், பெண்கள் நெரிசலில் சிக்கி கடும் அவதியடைந்தனர். வரும் 13ம் தேதி கார்த்திகை தீபத்தன்று மலை மீது தீபம் ஏற்றுவதால், அதிக அளவில் பக்தர்கள் வருவர். தற்போது உள்ள சூழல் நீடித்தால், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பழுதடைந்துள்ள ‘ஏசி’கள் மற்றும் மின் விசிறிகளை பழுது பார்த்து சீரமைக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.